5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நாளை தொடங்க உள்ள நிலையில் முந்தைய உலக கோப்பைகளை பற்றிய ஒரு அலசல் வருமாறு:–
                                   

முதலாவது உலக கோப்பை–2007

பங்கேற்ற அணி–12, சாம்பியன்–இந்தியா


முதலாவது 20 ஓவர் உலக கோப்பை போட்டி தென்ஆப்பிரிக்காவில் அரங்கேறியது. ஒரு நாள் போட்டி (50 ஓவர்) உலக கோப்பையில் இந்திய அணி படுதோல்வி கண்டதன் எதிரொலியாக சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி ஆகிய மும்மூர்த்திகள் ஒதுங்கிக் கொள்ள, புதிய கேப்டன் டோனி தலைமையில் இந்திய அணி பங்கேற்றது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய இளம் படை அசுர வேகத்தில் எழுச்சி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டம் மழையால் ரத்தான நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த லீக் ஆட்டம் சமனில் (தலா 141 ரன்) முடிந்தது. இதையடுத்து புதிதாக கொண்டு வரப்பட்ட வித்தியாசமான ‘பவுல்–அவுட்’ முறையில் இந்திய அணி வெற்றி பெற்றது.

சூப்பர்–8 சுற்றில் நியூசிலாந்திடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய இந்திய அணி அடுத்து இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்காவை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இதில் இங்கிலாந்துக்கு எதிராக ஸ்டூவர்ட் பிராட்டின் பந்து வீச்சில் யுவராஜ்சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசி உலக சாதனை படைத்தது மறக்க முடியாத நிகழ்வாகும். அத்துடன் 12 பந்துகளில் 50 ரன்களை கடந்த அவர், 20 ஓவர் கிரிக்கெட்டில் மின்னல் வேகத்தில் அரைசதம் விளாசியவர் என்ற சிறப்புக்கும் சொந்தக்காரர் ஆனார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.1 கோடி போனஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டியில் பரமஎதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட்டுக்கு 157 ரன்கள் சேர்த்தது. கவுதம் கம்பீர் 54 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தானுக்கு விக்கெட்டுகள் வேகமாக சரிந்தாலும், மிஸ்பா உல்–ஹக் மிரட்டினார். ஹர்பஜன்சிங்கின் ஒரே ஓவரில் 3 சிக்சர் அடித்து, இதய துடிப்பை எகிற வைத்தார். கடைசி 4 பந்தில் அந்த அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட போது, ஜோகிந்தர் ஷர்மா வீசிய பந்தை ‘ஸ்கூப் ஷாட்’ அடிக்க முயற்சித்த போது ஸ்ரீசாந்திடம் கேட்ச் ஆனார். 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த உலக கோப்பையில் இன்னொரு ஆச்சரியமான தகவல் என்ன வென்றால், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 57 பந்துகளில் 10 சிக்சருடன் 117 ரன்கள் குவித்தார். 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட்டில் பதிவான முதல் சதம் இது தான். ஆனால் அந்த சதத்திற்கு பலன் கிடைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் 205 ரன்கள் குவித்த போதிலும், அதை 13 பந்துகள் மீதம் வைத்து தென்ஆப்பிரிக்கா விரட்டிப் பிடித்துவிட்டது.

2–வது உலக கோப்பை–2009

பங்கேற்ற அணி–12, சாம்பியன்–பாகிஸ்தான்


இங்கிலாந்தில் நடந்த இந்த உலக கோப்பையில் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் புகுந்த இந்திய அணி லீக் சுற்றில் சிறிய அணிகளான அயர்லாந்து, வங்காளதேசத்தை மட்டும் எளிதில் வென்றது. ஆனால் சூப்பர்–8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்க அணிகளிடம் வரிசையாக உதை வாங்கிய இந்திய அணி அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இறுதி ஆட்டத்தில் ஆசிய அணிகளான பாகிஸ்தான்– இலங்கை அணிகள் லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் சந்தித்தன. இதில் இலங்கை அணி நிர்ணயித்த 139 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி அப்ரிடியின் அரைசதத்தின் துணையுடன் 18.4 ஓவர்களில் வெற்றிக்கனியை பறித்து கோப்பையை ருசித்தது.

லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை குட்டி அணியான நெதர்லாந்து புரட்டியெடுத்தது வியப்புக்குரிய விஷயமாகும். இந்த உலக கோப்பையில் ஒரு வீரர் கூட சதம் அடிக்காதது இன்னொருகவனிக்கத்தக்க அம்சமாகும்.

3–வது உலக கோப்பை–2010

பங்கேற்ற அணி–12, சாம்பியன்–இங்கிலாந்து


சரியாக 10 மாதங்கள் இடைவெளியில் வெஸ்ட் இண்டீசில் இந்த உலக கோப்பை நடந்தது. டோனி தலைமையில் கலந்து கொண்ட இந்திய அணி லீக் சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்காவை வென்றது. இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா 60 பந்துகளில் 101 ரன்கள் சேகரித்து பிரமாதப்படுத்தினார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

அதே சமயம் சூப்பர்–8 சுற்றில் இந்திய அணி தொடர்ந்து 2–வது முறையாக ஒரு வெற்றி கூட பெற முடியாமல் (ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கைக்கு எதிராக தோல்வி) நடையை கட்டியது.

அரைஇறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து இலங்கையையும், ஆஸ்திரேலியா பாகிஸ்தானையும் தோற்கடித்தன. இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–ஆஸ்திரேலிய அணிகள் மோதின. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பால் காலிங்வுட் தலைமையிலான இங்கிலாந்து அணி கீஸ்வெட்டர் (63 ரன்), கெவின் பீட்டர்சன் (47 ரன்) ஆகியோரின் அதிரடியின் உதவியுடன் 17 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு இலக்கை அடைந்து புதிய உலக சாம்பியன் ஆனது. கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து அணி ஒரு உலக கோப்பையை வென்றது இதுவே முதல் முறையாகும்.

4–வது உலக கோப்பை–2012

பங்கேற்ற அணி–12, சாம்பியன்–வெஸ்ட் இண்டீஸ்

இலங்கையில் நடந்த இந்த உலக கோப்பையில் இந்திய அணி வழக்கம் போல் லீக் சுற்றில் வெற்றிகளை வாரியது. இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு சூப்பர்–8 சுற்று தான் இந்த தடவையும் சிக்கலாகி போனது. சூப்பர்–8 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளை வீழ்த்திய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் மட்டும் படுதோல்வி அடைந்தது. இந்த பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய மூன்று அணிகளும் தலா 4 புள்ளியுடன் சமநிலை வகித்த போதிலும் ரன்–ரேட் அடிப்படையில் இந்திய அணி பின்தங்கி வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து 4 உலக கோப்பையிலும் அரைஇறுதியை எட்டிய முதல் அணி என்ற பெருமையை பாகிஸ்தான் தட்டிச் சென்றது.

அரைஇறுதி ஆட்டங்களில் இலங்கை பாகிஸ்தானையும், வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியாவையும் சாய்த்தன. கொழும்பில் நடந்த இறுதி சுற்றில் இலங்கை–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டேரன் சேமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சாமுவேல்ஸ் 78 ரன்கள் எடுத்தார். அடுத்து சொந்த மண்ணில் விளையாடிய இலங்கை அணியால் சுலபமான இலக்கை கூட நெருங்க முடியவில்லை. 18.4 ஓவர்களில் 101 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகுடத்தை சூடியது. ‘இந்த உலக கோப்பை எங்களுக்கு தான்; இலங்கை மக்களுக்காக வருந்துகிறோம்’ என்று முந்தைய நாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்ல் கூறியிருந்தார். சொன்னதை களத்திலும் செய்து காட்டினர்.

0 comments:

Post a Comment

Copyright © 2013 TAMIL SPORTS NEWS | Powered by Blogger
Design by Theme Junkie
Blogger Template by Lasantha | PremiumBloggerTemplates.com