மிர்பூர்: ஐசிசி டி20 உலக கோப்பை போட்டித் தொடர் வங்கதேசத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. தகுதிச் சுற்றின் தொடக்க லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 

                                                
2007ல் நடந்த முதலாவது தொடரில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. 2009ல் பாகிஸ்தான், இங்கிலாந்து (2010), வெஸ்ட் இண்டீஸ் (2012) அணிகளும் டி20 உலக கோப்பையை வென்றுள்ளன. இந்த நிலையில் 5வது தொடர் வங்கதேசத்தில் இன்று தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, பாகிஸ்தான் உள்பட டாப் 8 அணிகள் நேரடியாக பிரதான சுற்றில் விளையாட உள்ளன. வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்பட 8 அணிகள் தகுதி சுற்றில் இரு பிரிவுகளாக களமிறங்குகின்றன. ஏ, பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறும்.

இதில் 2 பிரிவுகளில் தலா 5 அணிகள் லீக் சுற்றில் மோதவுள்ளன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். முதலாவது அரை இறுதி ஏப். 3ம் தேதியும், 2வது அரை இறுதி ஏப். 4ம் தேதியும் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் ஏப். 6ம் தேதி நடக்கிறது.
இதுவரை நடந்துள்ள 4 தொடரிலுமே வெவ்வேறு அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளதால், 2014ம் ஆண்டுக்கான கோப்பையை கைப்பற்றவும் கடும் போட்டி நிலவுகிறது. சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடர் உள்பட வெளிநாட்டு தொடர்களில் தடுமாறி வரும் இந்திய அணிக்கு, இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் தற்போது நல்ல பார்மில் உள்ளதால் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகின்றன.

நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகளையும் அலட்சியப்படுத்த முடியாது. தகுதி சுற்றில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளிடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதி சுற்றில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் தொடக்க லீக் ஆட்டம் (ஏ பிரிவு), மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. சிட்டகாங்கில் இரவு 7 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஹாங்காங் - நேபாளம் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 21ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. முன்னதாக பயிற்சி ஆட்டங்களில் நாளை இலங்கை அணியையும், 19ம் தேதி இங்கிலாந்தையும் சந்திக்கிறது.

0 comments:

Post a Comment

Copyright © 2013 TAMIL SPORTS NEWS | Powered by Blogger
Design by Theme Junkie
Blogger Template by Lasantha | PremiumBloggerTemplates.com